ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து மனைவியின் கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து மனைவியின் கள்ளக்காதலனை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கறிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து மனைவியின் கள்ளக்காதலனை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கறிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கள்ளக்காதல்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 29). கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜேஸ்வரிக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமாகாத இளங்கோ (23) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி நந்தகோபாலுக்கு தெரிய வந்தது. இதை கேள்வி பட்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் மனைவி ராஜேஸ்வரியை கண்டித்து உள்ளார். ஆனால் அவர் இளங்கோவுடன் பழகுவதை கைவிடவில்லை.
கத்திக்குத்து
இந்தநிலையில் நேற்று முன்தினம் சாவடிபாளையம் பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்தில் ராஜேஸ்வரியும், இளங்கோவும் சந்தித்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது பின்தொடர்ந்து வந்த நந்தகோபால் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நந்தகோபால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளங்கோவையும், ராஜேஸ்வரியையும் குத்தினார்.
இதில் ராஜேஸ்வரியின் முகத்திலும், இளங்கோவின் கையிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதனால் நந்தகோபால் அங்கிருந்து தப்பி சென்றார். இதையடுத்து பலத்த காயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் 2 பேரும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அரிவாள் வெட்டு
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் நந்தகோபால் தனது மனைவி ராஜேஸ்வரியை தேடி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தார். அப்போது ராஜேஸ்வரி சிகிச்சை பெற்று வரும் பெண்கள் ரணசிகிச்சை உள்நோயாளிகள் வார்டுக்கு நந்தகோபால் சென்றார். அங்கு ராஜேஸ்வரியை சந்திக்க இளங்கோவும் வந்திருந்ததால் அவர்கள் 2 பேரும் பேசிக்கொண்டு இருந்ததை பார்த்து நந்தகோபாலுக்கு மேலும் ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் நந்தகோபால் தான் மறைத்து எடுத்து வந்திருந்த கறி வெட்டும் அரிவாளை எடுத்து இளங்கோவை சரமாரியாக வெட்ட முயன்றார்.
இதை பார்த்ததும் சுதாரித்து கொண்ட இளங்கோ அங்கிருந்து எழுந்து தப்பி ஓட முயன்றார். அதற்குள் நந்தகோபால் இளங்கோவனை சரமாரியாக வெட்டினார். அவரது கழுத்து, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதை நேரில் பார்த்த நோயாளிகள் அலறி அடித்து கொண்டு வார்டுக்கு வெளியே ஓடினார்கள். இதையடுத்து நந்தகோபால் அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து வெட்டுக்காயம் ஏற்பட்ட இளங்கோவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கைது
இதுபற்றி அறிந்ததும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் சம்பவம் நடந்த வார்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து தப்பி ஓடிய நந்தகோபாலை நேற்று இரவு போலீசார் கைது செய்தார்கள்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மனைவியின் கள்ளக்காதலனை அரசு ஆஸ்பத்திரிக்குள்ளேயே அரிவாளுடன் புகுந்து கறிக்கடைக்காரர் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆஸ்பத்திரியின் வளாகத்திலேயே ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.