சாமி சிலைகளுக்கு களியக்காவிளையில் உற்சாக வரவேற்பு
குமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு புறப்பட்ட நவராத்திரி சாமி சிலைகளுக்கு குமரி-கேரள எல்லையான களியக்காவிளையில் ேபாலீசார் அணிவகுத்து நின்று உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
களியக்காவிளை,
குமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு புறப்பட்ட நவராத்திரி சாமி சிலைகளுக்கு குமரி-கேரள எல்லையான களியக்காவிளையில் ேபாலீசார் அணிவகுத்து நின்று உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சாமி சிலைகள் ஊர்வலம்
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் யானை மற்றும் பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். அங்கு நவராத்திரி விழா பூஜைகளில் பங்கேற்ற பின்பு சாமி சிலைகள் மீண்டும் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருவது மரபு.
இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி குமரி மாவட்ட சாமி சிலைகள் திருவனந்தபுரத்திற்கு ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் காலையில் பத்மநாபபுரத்தில் நடந்தது.
சாமிசிலை ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு குழித்துறை மகாதேவர் கோவில் மற்றும் குழித்துறை சாமுண்டேஸ்வரி அம்மன் கோவிலில் தங்கியது.
எல்லையில் வரவேற்பு
குழித்துறை சாமுண்டேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் நேற்று காலையில் ஊர்வலம் தொடங்கியது. குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் அரசடி விநாயகர் கோவில் பக்தர்கள் சங்கம் சார்பில் சிறப்பு பூஜை மற்றும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் சாமி சிலைகள் குழித்துறை, திருத்துவபுரம், படந்தாலுமூடு வழியாக குமரி-கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளையை சென்றடைந்தது. அங்கு துப்பாக்கி ஏந்திய கேரள போலீசார் அணிவகுத்து நின்று வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மன்னரின் உடைவாள் மற்றும் சாமி சிலைகளை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கேரள தேவசம் போர்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், கேரள தேவசம்போர்டு தலைவர் ஆனந்தக்கோபன், தேவசம்போர்டு ஆணையர் பிரகாஷ், துணை ஆணையர் சசிகலா, உதவி ஆணையர் திலீப்குமார், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா, கேரள எம்.பி. சிவகுமார், பாறசாலை எம்.எல்.ஏ. ஹரீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று சாமி சிலைகளுக்கு வரவேற்பு அளித்தனர்.
இன்று திருவனந்தபுரம் செல்கிறது
அதன் பின்னர் சாமிசிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு நேற்று இரவு நெய்யாற்றின்கரை கிருஷ்ணசாமி கோவிலை சென்றடைந்தது.
நெய்யாற்றின்கரையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றடைகிறது. அதன் பின்னர் சாமி சிலைகள் நவராத்திரி கொலு மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நவராத்திரி பூஜைகள் நடைபெறும். பூஜைகள் முடிந்த பின்பு அடுத்த மாதம் 7-ந் தேதி மீண்டும் குமரிக்கு புறப்படும்.