மதுரைக்கு நாளை வரும்எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு - ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தகவல்
மதுரைக்கு நாளை வரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.
திருப்பரங்குன்றம்
மதுரைக்கு நாளை வரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.
ஆலோசனை கூட்டம்
திருப்பரங்குன்றத்தில் மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்டச் செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் அமைப்புச் செயலாளரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். இதனையடுத்து அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. அதைபுள்ளி விவரத்துடன் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் தரவில்லை. கோடநாடு வழக்கில் 90 சகவீதம் விசாரணை செய்து முடியும் தருவாய் இருக்கும் பொழுது வேண்டுமென்றே, சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு மாற்றப்பட்டு காலநீடிப்பு செய்தது யார்? இதுகுறித்து சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்விஎழுப்பும்போது, ஒளிபரப்பை காண்பிக்க மறுத்து விட்டார்கள். அதனால்தான் வெளிநடப்பு செய்தோம்.
தொழிலாளருக்கு விரோதம்
ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் செல்லும் என்று நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தெளிவுபடுத்தி விட்டது. கட்சியை விட்டு நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சி கொடியையும் பயன்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல. அவர் திருச்சியில் மாநாட்டை ரத்து செய்து விடுவார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்தால் பலியாகி விடக்கூடாது. முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது 110 விதியின் கீழ் மக்களுக்கான நலத்திட்டங்கள் இருந்தது. திட்டங்களை நிறைவேற்றித் தந்தார்கள். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் மக்களுக்காக ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
தொழிலாளர்களுக்கு 12 மணி நேரம் வேலை என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருப்பது தொழிலாளருக்கு விரோதமானதாகும்.
எடப்பாடி பழனிசாமி
மதுரையில் ஆகஸ்டு 20-ந் தேதி நடைபெறும் மாநாட்டிற்கான இடத்தை ஆய்வு செய்து வருகிறோம். இந்த மாநாடு வெற்றிக்கான அச்சாரம். வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக அமையும். நாடாளுமன்ற தேர்தலுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும். கட்சியின் பொதுச்செயலாளரான பிறகு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு எடப்பாடி பழனிசாமி வருகிறார். அவருக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.