சேலம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு-இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
சேலம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
உற்சாக வரவேற்பு
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து கார் மூலம் நேற்று இரவு சேலம் வந்தார். முன்னதாக சேலம் மாவட்ட எல்லையான தலைவாசல் பஸ் நிலைய பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர் கே.என்நேரு, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் மேளதாளத்துடன் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவருக்கு கட்சி நிர்வாகிகள் வெள்ளி செங்கோலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கினர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னதுரை, குணசேகரன், மாவட்ட துணை செயலாளர் பாரபட்டி சுரேஷ் குமார், தலைவாசல் மத்திய ஒன்றிய செயலாளர் சாத்தப்பாடி மணி என்கிற பழனிசாமி, தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன், தலைவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் அழகுவேல், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் செழியன், முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் உள்பட தி.மு.க.வினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நத்தக்கரை சுங்கச்சாவடியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, கலெக்டர் கார்மேகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் இரவில் தங்கினார்.
இன்று பங்கேற்கும் நிகழ்ச்சிகள்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-
காலை 9 மணிக்கு சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அஞ்சக்காடு ஜெயமுருகன் இல்லத்தில், நடுவனேரி ஊராட்சி மன்ற தலைவர் எம்.முருகன்-விஜயா தம்பதியின் மகன் பூபதிக்கும், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் காளியப்பன்- காந்திமதி தம்பதியின் மகள் அனிதாவுக்கும் திருமணத்தை நடத்தி வைக்கிறார். காலை 10.30 மணிக்கு வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், சென்னகிரி ஊராட்சியில், ஊரக விளையாட்டு மையத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்துகிறார்.
ஆய்வு கூட்டம்
காலை 11 மணிக்கு மாசிநாயக்கன்பட்டி நோட்டரி டேம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விழாவில் மாவட்டத்தில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். தொடர்ந்து மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பின்னர் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். மதியம் 12 மணிக்கு சேலம் அம்மாபேட்டை காலனி பகுதியில் ரூ.20 கோடியில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைய உள்ள இடத்தை பார்வையிடுகிறார்.
மதியம் 12.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் மாலையில் எடப்பாடியில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இரவு சேலத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு நாமக்கல் சென்று அங்கு தங்குகிறார்.