சதுரகிரி கோவிலுக்கு நுழைவு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்
சதுரகிரி கோவிலுக்கு செல்ல நுழைவு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என கலெக்டரிடம் இந்து மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர்.
சதுரகிரி கோவிலுக்கு செல்ல நுழைவு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என கலெக்டரிடம் இந்து மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர்.
கட்டணம் ரத்து
இந்து மக்கள் கட்சியின் மாநிலச்செயலாளர் வசந்தகுமார் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- செண்பகத்தோப்பு வன பேச்சி அம்மன் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறையினர் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்வதற்கான நுழைவு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலைய மணிக்கூண்டு முதல் வடக்கு ரதவீதி வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகர் புதிய பஸ் நிலையத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் புதிய பஸ் நிலையம் அருகில் வணிக மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகாசி, திருத்தங்கல், சாட்சியாபுரம் பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
கழிப்பறை வசதி
தேச மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பரத் ராஜா கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், விருதுநகர் தாளையப்பன் தெருவில் உள்ள பொதுக்கழிப்பறை சேதமடைந்துள்ளதால் அதனை இடித்து அகற்றிவிட்டு நவீன வசதிகளுடன் புதிய கழிப்பறை கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன வேங்கைகள் கட்சி மாவட்ட தலைவர் இரணியன் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்த வேல்முருகனின் குழந்தைகளுக்கு மலைக்குறவர் சாதி சான்றிதழ் வழங்கிட கோரியும், வேல்முருகனின் மனைவிக்கு அரசு வேலை வழங்கிடவும், வேல்முருகனின் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்திருந்தார். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே முற்றுகை போராட்டமும் நடத்தினர்.