தொழில் முனைவோர் மேம்பாட்டு நிகழ்ச்சி
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பு மற்றும் தர உறுதி மையம் சார்பில், தமிழக அரசின் புதுமை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் நிதி உதவியோடு கல்லூரி இறுதி ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். மேலாண்மை துறை தலைவர் அமிர்தகவுரி வரவேற்று பேசினார்.
நெல்லை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாக புதுமை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட மையத்தின் கள ஒருங்கிணைப்பாளர் சிவபாரதி தொடக்க உரையாற்றி, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். நெல்லை தொழில் முனைவோர் ஆலோசனை நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் பத்மநாப கமல் தொழில் முனைவு மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றி விளக்கி கூறினார்.
கோவில்பட்டி தனியார் நிறுவன இயக்குனர் முகம்மது நவ்சத் ஷெரீப் தமிழக அரசின் நிதி உதவி திட்டங்கள் பற்றியும், புதிதாக தொழில் தொடங்க உள்ள வாய்ப்புகள் பற்றியும் எடுத்துரைத்தார். தொழில் முனைவோர் பயிற்சியாளர் பலவேசம் தொழில் முனைவோருக்கான அத்தியாவசிய குணங்கள் பற்றி பேசினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று தொழில் முனைவு மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை பெற்றனர். மாணவி சிவகவுதமி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை நெல்லை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாக புதுமை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட மைய ஒருங்கிணைப்பாளர் சைலஸ் சற்குணம், கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, மேலாண்மை துறை தலைவர் அமிர்த கவுரி ஆகியோர் வழிகாட்டுதலின்படி, ஒருங்கிணைப்பாளர் நளினி மற்றும் மேலாண்மை துறை பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.