'சுற்றுச்சூழல் பாதிப்பு உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது' மத்திய அரசு செயலாளர் பேச்சு
சுற்றுச்சூழல் பாதிப்பு உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என சென்னையில் நடந்த ஜி20 மாநாட்டில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை செயலாளர் பேசினார்.
சென்னை,
ஜி20 சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் லீனா நந்தன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் ஜி20 நாடுகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளன. இந்த ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
பெரும் அச்சுறுத்தல்
இந்த ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் உலக நாடுகள் மற்றும் அமைப்புகளுக்கு உதவும். பருவநிலை மற்றும் சுற்றுச்சூழலின் சவால்களை எதிர்த்து போராடுவதில் நாம் கொண்டிருக்கும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.
சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதுபோன்ற மாநாடுகளில் மேற்கொள்ளப்படும் விவாதங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பை வெகுவாக குறைக்க முடியும். சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உலகளவில் கூட்டாக தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மந்திரிகள்
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் ஒவ்வொரு நாட்டின் பங்களிப்பும் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக ஜி20 நாடுகளின் சுற்றுச்சூழல் துறை மந்திரிகள் மட்டுமல்லாமல் இதர 15 நாடுகளின் சுற்றுச்சூழல் மந்திரிகள் பங்கேற்கும் மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இந்த மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக ஜி20 சுற்றுச்சூழல் மாநாட்டுக்குழு தெரிவித்துள்ளது.