எந்த கூட்டணியின் பெயரும் இல்லாமல் ஈரோடு அ.தி.மு.க. தேர்தல் பணிமனையில் மீண்டும் புதிய 'பேனர்'
எந்த கூட்டணியின் பெயரும் இல்லாமல் அ.தி.மு.க. தேர்தல் பணிமனையில் மீண்டும் புதிய பேனர் வைக்கப்பட்டது.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27-ந்தேதி நடக்கிறது. இங்கு அ.தி.மு.க. (எடப்பாடி பழனிசாமி அணி) சார்பில் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இதையொட்டி கிழக்கு சட்டமன்ற தொகுதி தலைமை தேர்தல் பணிமனை நேற்று முன்தினம் அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகில் திறக்கப்பட்டது. இந்த விழா அரங்கில் பிரமாண்ட பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயர் அச்சிடப்பட்டு இருந்தது. அ.தி.மு.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியாக இருந்தது. இந்த கூட்டணிக்கு தேசிய அளவில் பா.ஜனதா தலைமை வகித்து வருகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயர் வைக்கப்பட்டதும், பிளக்ஸ் பேனரில் பா.ஜனதா கட்சி தலைவர்களின் படங்கள் இல்லாமல் இருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மீண்டும் புதிய பிளக்ஸ்
இந்த தகவல் இணையங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரை வைக்கும் வகையில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலை எந்த கூட்டணியின் பெயரும் இல்லாமல் மீண்டும் புதிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. அதில், மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் அருளாசியுடன் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நல்லாசி பெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., எடப்பாடி பழனிசாமி உருவப்படங்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், மறைந்த தலைவர்களின் படங்களுடன் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் படங்கள் உள்ளன. ஆனால் பா.ஜனதா தலைவர்கள் படம் எதுவும் இல்லை.
அரசியல் ஆர்வலர்கள்
அ.தி.மு.க.வின் இன்னொரு அணியாக செயல்படும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இந்த தேர்தலில் பா.ஜனதா போட்டியிட்டால் தங்கள் வேட்பாளரை திரும்ப பெறுவோம் என்று பா.ஜனதாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.
ஆனால், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அணியில் பா.ஜனதாவுக்கும், தங்களுக்கும் எந்த உறவும் இல்லை என்று மக்களிடம் பிரசாரம் செய்து வாக்குகள் பெறும் நோக்கில் பிளக்ஸ் பேனரில் கூட பா.ஜனதா தலைவர்களின் படங்களை போடாமல் மறைப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.