ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
சென்னை,
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அதிமுக வழக்கு மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.