ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரசாரம்


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரசாரம்
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பிரசாரம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவருக்கு கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு தி.மு.க. அமைச்சர்கள் தினந்தோறும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று வைராபாளையம், அண்ணாநகர், பழனியப்பா நகர், கான்வென்ட் பகுதி, தீரன்சின்னமலை வீதி, நெரிக்கல்மேடு, அன்னை சத்யாநகர், வண்டிப்பேட்டை, காட்டூர் பகுதி, பூம்புகார் நகர், பாரதிநகர், அருள்வேலன் நகர், பச்சப்பாளிமேடு, ஞானபுரம், காந்திநகர், காமராஜ் நகர், தண்ணீர்பந்தல்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தீவிர வாக்கு சேகரிப்பு

அப்போது தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பால்வளத்துறை அமைச்சர் மு.நாசர், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.

இதில் சேலம் மாவட்ட செயலாளர் சிவலிங்கம், ஈரோடு ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

சாதனை பட்டியல்

முன்னதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டில் பல்வேறு பணிகளுக்காக ரூ.750 கோடி நிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி உள்ளார்.

இப்படி தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டியலிட்டு கொண்டே செல்லலாம். தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தற்போது நல்லாட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சிக்கு மேலும் ஊக்கத்தை கொடுக்கும் வகையில் இந்த இடைத்தேர்தல் முடிவு இருக்க வேண்டும். எனவே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற நீங்கள் அனைவரும் கை சின்னத்திற்கு வாக்காளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.


Next Story