ஈரோடு ஈ.வி.என். ரோட்டில்திட்ட பணிகளால் போக்குவரத்து நெரிசல்;வாகன ஓட்டிகள் அவதி
ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் திட்ட பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் திட்ட பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
திட்ட பணிகள்
ஈரோடு மாநகராட்சியில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் முக்கியமானதாக ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் கடந்த சில மாதங்களாக மழை நீர் வடிகால் மற்றும் சாக்கடை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ரோட்டின் ஒரு பகுதி தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
ஈரோட்டில் முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த ரோடு இருப்பதோடு, இந்த ரோட்டில் தான் அரசு ஆஸ்பத்திரி, மின்வாரிய அலுவலகம், தனியார் மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் தற்போது அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
போக்குவரத்து நெரிசல்
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, 'தற்போது ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது. இந்த நேரத்தில் ஈ.வி.என். ரோட்டில் திட்டப்பணிகள் நடந்து வருவதால் இந்த பகுதியை கடந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.
வெயிலின் தாக்கத்தால் எங்களால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. பகல் நேரத்தில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு பதிலாக இரவு நேரத்தில் பணிகள் மேற்கொண்டால் எந்த ஒரு இடையூறும் இருக்காது' என்றனர்.