ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் வீசும் துர்நாற்றம்கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதி
ஈரோடு ஈ.வி.என்.ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதி அடைந்தனர்.
ஈரோடு ஈ.வி.என்.ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதி அடைந்தனர்.
சாலை விரிவாக்கம்
ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈ.வி.என்.ரோடு, ரெயில் நிலையம் ரோடு, கருங்கல்பாளையம் காவிரிரோடு, மூலப்பாளையம் பூந்துறைரோடு ஆகிய முக்கிய சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அங்கு சாலையோரமாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. இதற்காக கான்கிரீட் போடும் பணி நடந்து வருகிறது.
ஈரோடு ஈ.வி.என்.ரோட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. அங்கு பொக்லைன் எந்திரம் மூலமாக குழி தோண்டப்பட்டு கான்கிரீட் அமைக்கப்படுகிறது.
துர்நாற்றம்
இந்த நிலையில் ஈ.வி.என்.ரோட்டில் பல்வேறு இடங்களில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. குறிப்பாக சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நீண்ட தூரத்துக்கு கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது.
இதனால் பொதுமக்கள் சாலையோரமாக நடந்து செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும், சாலையோரமாக உள்ள வீடுகள், கடைகளில் உள்ளவர்கள் துர்நாற்றம் காரணமாக மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே கழிவுநீர் தேங்காமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோரிக்கை
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக சாலையோரம் கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் சுமார் ஒரு மாதமாக நடந்து வருகிறது. இதில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. எனவே கடைகளுக்கோ, வீடுகளுக்கோ கடந்து செல்ல பெரும் சிரமம் அடைகிறோம்.
ஒரு வாரமாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. வீடுகளில் இருக்கவே முடியாமல் தவிக்கிறோம். சாலை விரிவாக்கம் பணிகள் முடிவடைய தாமதமானாலும்கூட, தேங்கிய கழிவுநீரையாவது 2 நாட்களுக்கு ஒரு முறை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.