ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
பணியை புறக்கணித்து போராட்டம்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீர் போராட்டம்
ஈரோடு அரசு ஆஸ்பத்திாியில் ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று காலை ஆஸ்பத்திரி வளாகத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கும், ஒப்பந்த நிறுவனத்துக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீரென பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தமிழக மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் சுந்தரமூா்த்தி கூறியதாவது:-
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளர்கள் உள்பட 132 பேரும், கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் 30 பேரும், சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் 22 பேரும், பவானி அரசு ஆஸ்பத்திரியில் 23 பேரும் என மொத்தம் 207 பேர் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் அடிப்படையில் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 2022-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் அறிவித்த ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.707 வீதம் மாதந்தோறும் ரூ.21 ஆயிரத்து 260 வழங்கப்பட வேண்டும். ஆனால் ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.9 ஆயிரத்து 450 மட்டுமே வழங்கப்படுகிறது.
கோரிக்கைகள்
ஆஸ்பத்திரியில் உடை மாற்றவும், ஓய்வெடுக்கவும் அறை ஒதுக்க வேண்டும். ஒப்பந்த முறைப்படி சுழற்சி முறையில் பணி செய்ய அனுமதிக்க வேண்டும். இலவச சீருடை, பாதுகாப்பு உடைகள் வழங்க வேண்டும். விடுமுறை நாட்களில் பணியாற்றுபவர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். ஊதியத்தில் 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த நிறுவனத்தின் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்தனர்.
இவ்வாறு அவர் கூறினர்.