ஈரோடு சம்பத்நகர் முதல் கருங்கல்பாளையம் வரை 134 விநாயகர் சிலைகள் ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் ஆற்றில் கரைப்பு


ஈரோடு சம்பத்நகர் முதல் கருங்கல்பாளையம் வரை  134 விநாயகர் சிலைகள் ஊர்வலம்  போலீஸ் பாதுகாப்புடன் ஆற்றில் கரைப்பு
x

சிலைகள் ஊர்வலம்

ஈரோடு

ஈரோட்டில் சம்பத்நகர் முதல் கருங்கல்பாளையம் வரை 134 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.

விநாயகர் சிலை கரைப்பு

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி கொண்டாடப்பட்டது. விழா அன்று விநாயகர் சிலைகள் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்டு. பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதுபோல் இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் சிலைகள் அமைக்கப்பட்டன. இப்படி வைக்கப்பட்ட சிலைகள் ஆங்காங்கே நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 800-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன. ஈரோடு சம்பத்நகரில் 11 அடி உயர லட்சுமி குபேர விநாயகர் சிலை அமைக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே மாவட்டத்தில் கோபி, சத்தியமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சிகள் முடிந்து விட்ட நிலையில், ஈரோடு மாநகர் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

சம்பத் நகர்

முன்னதாக நேற்று மாநகரின் பல்வேறு இடங்களில் இருந்தும் விநாயகர் சிலைகள் சம்பத் நகர் பகுதிக்கு வாகனங்களில் எடுத்து வரப்பட்டன. சிலைகளை பிரதிஷ்டை செய்த பகுதிகளில் இருந்து அகற்றும் முன்பு விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சில இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் சிலைகள் வாகனங்களில் வைக்கப்பட்டு சம்பத் நகர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. மாநகர் முழுவதும் இருந்து சிலைகள் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து ஊர்வல தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் ப.ஜெகதீசன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ஜெ.எஸ்.கிஷோர்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் ப.சக்திமுருகேஷ், பொருளாளர் கு.கோவிந்தராஜ், செயலாளர் க.கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி கோவை கோட்ட பேச்சாளர் ஆ.கிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் நா.சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினார்கள். நிகழ்ச்சியில் டாக்டர் சி.சரஸ்வதி எம்.எல்.ஏ., இ.சந்திரசேகர், பி.மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஆர்.ஆர்.துளசி பில்டர்ஸ் நிர்வாக இயக்குனர் ஆர்.ஆர்.சத்தியமூர்த்தி கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

134 சிலைகளுடன் ஊர்வலம்

சம்பத்நகரில் வைக்கப்பட்டு இருந்த 11 அடி உயர விநாயகர் சிலையுடன் 134 சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

சம்பத்நகரில் தொடங்கிய ஊர்வலம் பெரியவலசு, முனிசிபல்காலனி ரோடு, மேட்டூர் ரோடு, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, மீனாட்சி சுந்தரனார் ரோடு (பிரப் ரோடு), காமராஜ் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு, காவிரி ரோடு வழியாக கருங்கல்பாளையம் காவிரிக்கரையை சென்று அடைந்தது.

ஊர்வலம் சென்ற வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று சிலைகளுக்கு வரவேற்பு அளித்தனர். பக்தி கோஷங்கள் முழங்க ஊர்வலம் காவிரிக்கரையில் நிறைவடைந்தது. அங்கு, சிலைகளுக்கு பூஜை செய்யப்பட்டு ஆற்றில் கரைக்கும் பணி தொடங்கியது. ஒவ்வொரு சிலையாக காவிரி ஆற்றில் விட்டு கரைத்தனர். ஆற்றில் தண்ணீர் அதிகம் சென்றுகொண்டு இருந்ததால், பாதுகாப்புக்காக கிரேன்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி நள்ளிரவு வரை நடந்தது.

600 போலீசார்

ஊர்வலத்தையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சிலைகளுக்கு தலா ஒரு போலீஸ் வீதம் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வழி நெடுகிலும் போலீசார் பணியில் இருந்தனர்.

ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜானகிராமன், கனகேஸ்வரி, உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் (பெருந்துறை), துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆனந்தகுமார் (ஈரோடு டவுன்), ஷியாமளா (கோபி), அமிர்தவர்ஷினி (பவானி), சேகர் (குற்ற ஆவண காப்பகம்). நீலகண்டன் (குற்றப்பிரிவு) மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், சோமசுந்தரம், ராஜபிரபு, தெய்வராணி, நிர்மலாதேவி, தீபா உள்பட 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story