'ஈரோடு சோலார் பஸ்நிலையம் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்'
ஈரோடு சோலார் பஸ்நிலையம் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் சு.முத்துச்சாமி கூறினார்.
ஈரோடு:
ஈரோடு சோலார் பஸ்நிலையம் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் சு.முத்துச்சாமி கூறினார்.
பஸ்நிலையம்
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சோலாரில் அமைக்கப்படும் பஸ் நிலையம் ஒரு மாதத்தில் தற்காலிகமாக பயன்பாட்டுக்கு வரும். 2 ஆண்டுகளில் இந்த பஸ் நிலையத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு ஒரு மாதிரி பஸ் நிலையமாக உருவாக்கப்படும். ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வில்லரசம்பட்டி நால்ரோடு மற்றும் பெருந்துறை ரோட்டில் 2 இடங்களில் ரவுண்டானா அமைக்கப்படுகிறது. பன்னீர்செல்வம் பூங்காவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க விரிவுபடுத்தும் பணியும் நடைபெற உள்ளது. தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
ஆக்கிரமிப்பு அகற்றம்
சாஸ்திரிநகரில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 800 குடும்பங்கள் 44 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். அவர்கள் தங்களது முழு வருமானத்தை செலுத்தி அங்கு வீடுகளை கட்டிவிட்டனர். அங்கேயே சிலர் கடைகளும் வைத்து நடத்தி வருகிறார்கள். அவர்களை மொத்தமாக வெளியேற்றினால் சாப்பாட்டுக்குக்கூட பிரச்சினை ஏற்படும். இந்த உணர்வுகளுக்கு மதிப்பளித்து ரெயில்வே துறையிடம் மாவட்ட கலெக்டர் பேசி உள்ளார். மேலும், எம்.பி.க்கள் மூலமாக மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளோம். முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச்சென்று மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த பகுதியை சுற்றிலும் தனியார் பட்டா நிலங்கள் உள்ளதால், இனிமேல் அந்த பகுதியை ரெயில்வே துறை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் அந்த நிலத்துக்கு வாடகை கொடுக்கவோ அல்லது அரசு நிர்ணயிக்கும் தொகையை வழங்கவோ தயாராக உள்ளனர். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கோர்ட்டு உத்தரவின்படி அகற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் அங்குள்ள மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுத்த பிறகுதான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இதேபோல் தொழில்அதிபர்கள் மூலமாக அரசு பள்ளிக்கூடங்களில் கட்டிடம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
குடிநீர் வினியோகம்
ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெறுவதால் குடிநீர் வினியோகம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. நீரேற்று நிலையத்தில் உள்ள மின்மோட்டார் பழுது காரணமாக குறிப்பிட்ட இடங்களில் குடிநீர் வினியோகம் செய்ய முடிவதில்லை. அங்கு மேயர் நேரடியாக சென்று ஆய்வு செய்து, கூடுதல் மின் மோட்டார் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் முறையாக திட்டமிடாமல் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதாவது 50 அடி உடைய சாலையில் இருபுறமும் தலா 10 அடிக்கு நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது. இதை மாற்றி அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு, குறைபாடு உள்ளதா? என்பதை கண்டறிய ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதன் அறிக்கை வந்ததும், முறைகேடு ஏற்பட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
தனிக்குழு அமைப்பு
கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட பிறகு, முறைகேடாக தண்ணீர் எடுக்கப்படுகிறதா? என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தனிக்குழு அமைக்கப்படும். வாய்க்கால் கான்கிரீட் அமைப்பது தொடர்பாக இரு தரப்பு விவசாயிகளையும் சமாதானம் செய்ய முயற்சி எடுத்து வருகிறோம். மற்ற பிரச்சினைக்கு விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராடுகிறார்கள். அதேபோல் இந்த பிரச்சினைக்கு அவர்கள் ஒன்று சேர்ந்து பேசினால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சீரமைப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் சென்று சமாதானம் செய்தால், ஆதரவு தெரிவிப்பவர்களின் விருப்பமும் நிறைவேறும். அதற்காக தான் எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் அதிகமாக சென்று பேசுகிறோம்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துச்சாமி கூறினார்.