எசனை காட்டு மாரியம்மன் கோவில் தேரோட்டம்


எசனை காட்டு மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

எசனை காட்டு மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே எசனையில் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் உள்ள காட்டுமாரியம்மன் கோவிலில் கடந்த 23-ந் தேதி பூப்போடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து சித்திரை திருவிழா கடந்த 30-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. திருவிழாவின்போது ஏகாந்தசேவை, அன்னம், சிம்மம், பள்ளி கொண்ட காட்சி, சூரியன், சந்திரன் பிரபை ஆகிய அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் தினமும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகளும், கடந்த 7-ந் தேதி பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலாவும் நடந்தது. நேற்று முன்தினம் பொங்கல் வழிபாடு, மாவிளக்கு பூஜை, வெட்டுங்குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா ஆகியவை நடந்தன. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. வடம் பிடித்தல் நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் பெரியசாமி, செல்லமுத்து, லோகுநல்லுசாமி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள், ஆய்வாளர் தீபாதேவி, வேணுகோபாலசுவாமி கோவில் செயல் அலுவலர் தேவி மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தாரை, தப்பட்டை முழங்க, மேளதாளங்களுடன் எசனை கடைவீதியில் இருந்து புறப்பட்ட தேர் புதுப்பிள்ளையார் தெரு, வேணுகோபாலசுவாமி, அக்ரகாரம், சிவன் கோவில் தெரு உள்ளிட்ட கிராமத்தின் பிரதான வீதிகள் வழியாக இழுத்து செல்லப்பட்டு மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. இதில் எசனை, அரும்பாவூர், அன்னமங்கலம், பாப்பாங்கரை, சோமண்டாபுதூர், கோனேரிபாளையம், வேப்பந்தட்டை, தொண்டபாடி, அனுக்கூர், பெரம்பலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (புதன்கிழமை) மஞ்சள் நீர்-விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.


Next Story