300-க்கும் மேற்பட்ட சேவைகள் இ-சேவை திட்டம் மூலம் வழங்கப்படும்
இந்த ஆண்டுக்குள் அரசு துறையின் 300-க்கும் மேற்பட்ட சேவைகள் இ-சேவை திட்டம் மூலமாக வழங்கப்படும் என்று அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் இ-ஆபிஸ் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி முன்னிலை வகித்தார்.
கலெக்டர் வினீத், மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார், மின்னாளுமை மேலாளர் சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பணிகளில் எளிமை
பின்னர் அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் எளிதாக கொண்டு செல்ல வேண்டும். பயனாளிகளை தேடி திட்டம் சென்றடையும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இந்த ஆண்டுக்குள் 300-க்கும் மேற்பட்ட அரசு துறை சார்ந்த சேவைகளை நாம் மின்னணு உருவாக்கம் செய்து இ-சேவை திட்டம் மூலமாக வழங்க இருக்கிறோம். இ-ஆபிஸ் மிகப்பெரிய பயனை தருகிறது. அனைத்து அலுவலகத்திலும் இ-ஆபிஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் பணிகள் எளிமையாக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பொறுத்து பார்த்தால் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் அரசு அலுவலகங்களில் ஒரு வருடத்துக்கு 31 டன் காகித தாள் சேமிக்கப்படுகிறது. இ-ஆபிஸ் திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்துவதற்கு தகவல் தொழில்நுட்பத்துறை திட்டமிட்டு பணிகளை செய்து வருகிறது.
இ-ஆபிஸ் திட்டம்
இ-ஆபிஸ் திட்டம் குறித்து தலைமை செயலகத்தை பொறுத்தவரை 3 ஆயிரத்து 247 பேருக்கு பயிற்சி அளித்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகம், அரசு அலுவலகங்கள், தாலுகா, கிராம அலுவலகங்கள் வரை இந்த திட்டத்தை கொண்டு செல்ல உள்ளோம்.
எந்த துறையில் மக்களுக்கான சேவையில் தாமதம் ஏற்படுகிறது என்பதை அறிந்து எதற்காக காலதாமதம் என்பதை தெரிவிக்கும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகிறோம். மக்கள் எந்த அலுவலகத்திலும் காத்திருக்காமல் இருப்பதற்கும், தவறான முறையில் சேவை பெறாமல் இருப்பதற்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நடவடிக்கை
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து சான்றிதழ் பெறுவதில் தாமதம் என்று புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டுவரி வசூலிப்பதில் மென்பொருள் பதிவேற்றம் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகிறோம். பல ஊராட்சிகளில் மென்பொருள் பதிவேற்றம், மேம்படுத்த வேண்டியுள்ளது. அதை படிப்படியாக சரி செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.