இ.எஸ்.ஐ. மருத்துவமனை அக்டோபர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும்
திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிந்து வருகிற அக்டோபர் மாதம் செயல்பட தொடங்கும் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.
அமைச்சர் ஆய்வு
தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. மருந்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தொழிலாளர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள், மருந்து மாத்திரைகள் போதுமான அளவு இருப்பில் உள்ளதா? தொழிலாளர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து மருந்துகளை அதிக அளவில் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அங்கிருந்த நோயாளிகளிடம், சிகிச்சை முறை திருப்தியாக உள்ளதா? என கேட்டறிந்தார். அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்தார்.
அக்டோபர் முதல் செயல்படும்
பின்னர் பூலுவப்பட்டி ரிங் ரோட்டில் விரிவாக்கப்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். அமைச்சர் கூறும்போது, 'ரூ.84 கோடியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. 30 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. வருகிற 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் அனைத்து பணிகளும் முடிவடையும். அக்டோபர் மாதம் முதல் மருத்துவமனை செயல்பட தொடங்கும்' என்றார்.
அதன்பிறகு திருப்பூர் கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆவணங்களை ஆய்வு செய்து பின்னர் ஊழியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். ஆன்லைன் மூலமாக பதிவு நடைபெறும் விவரங்களை கேட்டறிந்தார்.