தொடர்மழையினால் நித்திய கல்யாணி பூக்கள் சாகுபடி பாதிப்பு
தாயில்பட்டி பகுதிகளில் தொடர்மழையினால் நித்திய கல்யாணி பூக்களின் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
தாயில்பட்டி,
தாயில்பட்டி பகுதிகளில் தொடர்மழையினால் நித்திய கல்யாணி பூக்களின் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
நித்திய கல்யாணி பூக்கள்
வெம்பக்கோட்டை ஒன்றியம் தாயில்பட்டி, மடத்துப்பட்டி, சுப்பிரமணியபுரம், சிப்பிப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நித்திய கல்யாணி பூக்கள் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது நித்திய கல்யாணி பூக்கள் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விளைச்சல் நன்றாக இருந்தது. தற்போது கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குவிண்டால் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை இருந்தது. தற்போது ரூ.6,500-ஆக விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர்மழை
இதுகுறித்து தாயில்பட்டி விவசாயி சண்முககனி கூறியதாவது:-
தற்போது அக்னி நட்சத்திரம் நடந்து வருகிறது. ஆனால் மழைக்காலம் போல தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் பரவலாக நித்திய கல்யாணி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.
நித்திய கல்யாணிக்கு குறைவான மழை பெய்தாலே போதுமானது. ஆனால் தற்போது தொடர்ந்து மழை ெபய்து வருகிறது. இதனால் பாத்திகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இவ்வாறு தண்ணீர் தேங்கி நிற்பதால் வேர்அழுகல் நோயினால் நித்திய கல்யாணி பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
விளைச்சல் பாதிப்பு
கடந்த ஆண்டை காட்டிலும் விலை அதிகமாக இருந்ததால் லாபம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் இருந்த விவசாயிகளுக்கு தொடர்மழையினால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.