எட்டிகுளம் கண்மாய், கால்வாய்களை தூர்வார எடுத்த நடவடிக்கை என்ன?அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி
வாடிப்பட்டி அருகில் உள்ள எட்டிகுளம் கண்மாய், நீர்வரத்து கால்வாய்களை தூர்வார எடுத்த நடவடிக்கை என்ன? என்று அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
வாடிப்பட்டி அருகில் உள்ள எட்டிகுளம் கண்மாய், நீர்வரத்து கால்வாய்களை தூர்வார எடுத்த நடவடிக்கை என்ன? என்று அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
கண்மாய், கால்வாய்களை தூர்வார வழக்கு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சாணாம்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் கூறியிருந்ததாவது:-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, குலசேகரன்கோட்டை அருகில் எட்டிகுளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயின் அருகில் திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லை உள்ளது. சிறுமலையில் இருந்தும், மாவூத்து அணையில் இருந்தும் பல்வேறு கால்வாய்கள் மூலம் இந்த கண்மாய்க்கு தண்ணீர் கிடைக்கிறது.
இந்த கண்மாய் நிரம்பினால் வெளியேறும் உபரிநீர் பல்வேறு கண்மாய்களுக்கு சென்று, வைகை ஆற்றில் கலக்கிறது. ஆனால் இந்த கண்மாயும், வரத்து கால்வாய்களும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை.
இதனால் கண்மாயிலும், வரத்து கால்வாய்களிலும் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் நீர்வரத்தும், விவசாய பணிகளும் பாதிக்கப்படுகிறது.
அவமதிப்பு நடவடிக்கை
இந்த பகுதியை தூர்வார வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்பேரில் அதிகாரிகள் நீர்நிலை மற்றும் வரத்து கால்வாய் பகுதிகளை வரையறை செய்து உள்ளனர். ஆக்கிரமிப்பாளர்களை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்தநிலையில் சிறுமலையில் இருந்து வரும் தண்ணீர் வரத்து கால்வாய்களை முழுமையாக தூர்வார மதுரை, திண்டுக்கல் 2 மாவட்ட அதிகாரிகளும் ஒத்துழைத்து நடவடிக்கை எடுத்திருந்தால், பல கிராமங்களில் விவசாயம் தடையின்றி நடக்கும். இதற்கு தேவையான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
பதில் அளிக்க உத்தரவு
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில், எட்டிகுளம் கண்மாய், நீர்வரத்து கால்வாய்களை தூர்வார எடுத்த நடவடிக்கை என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர் இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.