பொதுப்பயன்பாட்டு இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடம் இடித்து அகற்றம்
உடுமலை நகராட்சியில் பொதுப்பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
உடுமலை நகராட்சியில் பொதுப்பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
பொது பயன்பாடு
புதிய குடியிருப்புகள் அமைக்கப்படும் போது பூங்கா, நூலகம் உள்ளிட்ட பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் வகையில் குறிப்பிட்ட அளவிலான இடம் நகராட்சிக்கு ஒப்படைக்கப்படும். இவ்வாறு ஒதுக்கப்படும் இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமித்து சொந்தப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு சொந்தப் பயன்பாட்டில் உள்ள இடங்கள் மற்றும் நகராட்சியிடம் ஒப்படைக்காத இடங்கள் போன்றவற்றை மீட்கும் வகையில் உடுமலை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்பு
அந்த வகையில் கடந்த வாரம் கல்யாணி அம்மாள் லே அவுட் பகுதியில் ரூ.15 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது.
இந்த நிலையில் உடுமலை நகராட்சியின் 2- வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி நகர் பகுதியில் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து நகரமைப்பு அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் அங்கு சென்ற நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை இடித்து அகற்றினர்.
உடுமலை நகராட்சியின் தொடர் நில மீட்பு நடவடிக்கைகள் பல தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது.