8 மாதம் ஆகியும் ஒரு பணி கூட நடக்கவில்லை-பரமக்குடி நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு
8 மாதம் ஆகியும் ஒரு பணி கூட நடக்கவில்லை என்று பரமக்குடி நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டது.
பரமக்குடி,
8 மாதம் ஆகியும் ஒரு பணி கூட நடக்கவில்லை என்று பரமக்குடி நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டது.
நகர்மன்ற கூட்டம்
பரமக்குடி நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் சேதுகருணாநிதி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். மேலாளர் தங்கராஜ் அனைவரையும் வரவேற்றார். நகராட்சி வருவாய் ஆய்வாளர் முருகன் தீர்மானங்களை வாசித்தார்.அப்போது துணைத்தலைவர் குணசேகரன், நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதியின் இருக்கைக்கு அருகில் இருக்கும் அவரது துணைத் தலைவர் இருக்கையில் அமராமல் கவுன்சிலர்களின் வரிசையில் வந்து அமர்ந்தார்.
பின்பு அவர் எழுந்து பேசுகையில், இனிமேல் அந்த துணைத்தலைவர் இருக்கையில் நான் அமர மாட்டேன். நகர்மன்ற நிர்வாகிகள் பொறுப்பேற்று 8 மாதங்கள் ஆகியும் எந்த பணிகளும் நடைபெறவில்லை. எந்த திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை. கவுன்சிலர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. துணைத் தலைவர் பதவியில் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து துணைத் தலைவர் பதவியை எடுத்துக் கொள்ளுங்கள் என ஆவேசமாக பேசினார்.
அதிகாரிகள் இல்லாமல் ஏன் கூட்டம்?
தொடர்ந்து பல்வேறு கவுன்சிலர்கள் தங்கள் குறைகளை கோரிக்கைகளையும் பேசினர். ஆணையாளர், பொறியாளர், உதவி பொறியாளர் உள்பட அதிகாரிகள் நகரமன்ற கூட்டத்தில் பங்கேற்காததால் கவுன்சிலர்கள் கடும் கோபமடைந்து அதிகாரிகள் இல்லாமல் ஏன் கூட்டம் நடத்துகிறீர்கள்? குறைகளை கூறினால் அதை கேட்கவும் செயல்படுத்தவும் யார் இருக்கிறார்கள்? என ஆவேசமாக பேசி கூட்டத்தில் இருந்து ஒவ்வொருவராக கிளம்பி சென்றனர்.