நீர்நிலைகளில் தண்ணீர் பெருகினாலும் ஆக்கிரமிப்புகளால் பாதிப்பு
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் நீர்நிலைகளில் தண்ணீர் பெருகினாலும் ஆக்கிரமிப்பினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் நீர்நிலைகளில் தண்ணீர் பெருகினாலும் ஆக்கிரமிப்பினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பரவலாக மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வழக்கமாக மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அதிக மழை பெய்யும் நிலையில் தற்போது மாவட்டத்தின் கிழக்கு பகுதியிலும் மழை அதிகமாக பெய்து வருகிறது.
நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை அளவு மி.மீ. வருமாறு:- அருப்புக்கோட்டை 70, சாத்தூர் 8.6, ஸ்ரீவில்லிபுத்தூர் 15.8, சிவகாசி 16.2, விருதுநகர் 32, திருச்சுழி 81, காரியாபட்டி 44.2, பிளவக்கல் 5.8, கோவிலாங்குளம் 60. மாவட்டத்தில் பெய்த ெமாத்த மழை அளவு 358. சராசரி மழை அளவு 29.83.
நீர்நிலைகள்
மாவட்டத்தில் பெரியாறு, கோவிலாறு, வெம்பக்கோட்டை, கோல்வார்பட்டி, ஆனைக்குட்டம், குல்லூர் சந்தை, இருக்கன்குடி, சாஸ்தா கோவில் ஆகிய அணைகள் உள்ளன. பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.
கிராமப்பகுதிகளில் ஊருணிகளும், பண்ணை குட்டைகளும் உள்ளன. கண்மாய்களை பொருத்தமட்டில் அவை முறையாக மராமத்து செய்யப்படாததால் கருவேலமர ஆக்கிரமிப்பால் நீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் பல கண்மாய்கள் உள்ளன. வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கண்மாய்களுக்கு நீர்வரத்துக்கும் வழி இல்லாத நிலை உள்ளது.
அணையின் நீர்மட்டம்
மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் தொடர் மழையால் நிரம்பி உள்ளன. பிளவுக்கள் பெரியாறு அணையில் 14.5 மீட்டர் தண்ணீர் தேக்கி வைக்க கூடிய நிலையில் 11.21 மீட்டர் தண்ணீர் உள்ளது. கோவிலாறு அணையின் கொள்ளளவு 15 மீட்டராக உள்ள நிலையில் 11.4 மீட்டர் நீர் உள்ளது.
வெம்பக்கோட்டை அணையில் 4.58 மீட்டரும், கோல்வார்பட்டி அணையில் 3.79 மீட்டரும், ஆனைக்குட்டம் அணையில் 4 மீட்டரும், குல்லூர் சந்தை அணையில் 2.34 மீட்டரும், இருக்கன்குடி அணையில் 4.3 மீட்டரும் தண்ணீர் உள்ளது. அணைகளில் நீர் பிடிப்பு பகுதிகளிலும், பாசன கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புகளில் சிக்கி உள்ளது.
எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.
தண்ணீர் வெளியேறும் நிலை
ஆனைக்குட்டம் அணையிலிருந்து அணை திறக்கப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரை தண்ணீர் வெளியேறும் நிலை தொடர்கிறது. இதுகுறித்து விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் வலியுறுத்தி கூறியுள்ளார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே விவசாயிகள் மற்றும் விருதுநகர் நகராட்சியின் நலன் கருதி தமிழக அரசு இந்த அணையில் இருந்து நீர் வெளியேறுவதை தடுக்க ஷட்டர்களை மாற்றியமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.