தி.மு.க.வின் கிளைச்செயலாளர்கள் கூட பயப்பட மாட்டார்கள்


தி.மு.க.வின் கிளைச்செயலாளர்கள் கூட பயப்பட மாட்டார்கள்
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் மிரட்டலுக்கு தி.மு.க.வின் கிளைச்செயலாளர்கள் கூட பயப்பட மாட்டார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்:

மத்திய அரசின் மிரட்டலுக்கு தி.மு.க.வின் கிளைச்செயலாளர்கள் கூட பயப்பட மாட்டார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

பொற்கிழி வழங்கும் விழா

நாகை மாவட்ட தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் நேற்று நடந்தது. விழாவுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் தலைமை தாங்கினார். அமைச்சர் ரகுபதி, தாட்கோ தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான மாரிமுத்து வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த முன்னோடிகள் 700 பேருக்கு பொற்கிழி, 350 பெண்களுக்கு இலவச தையல் எந்திரம், 500 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை மற்றும் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கினார். மேலும் தி.மு.க. மாவட்ட அலுவலகம் கட்டுமான பணியை மேடையில் இருந்தபடியே தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

நாகைக்கு தனி சிறப்பு

கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒரு ஆண்டு காலத்திற்கு சிறப்பாக கொண்டாட வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அரசு சார்பில் ஒருபுறம் நிகழ்ச்சிகள் நடந்தாலும், கட்சி சார்பில் இதுபோன்ற விழாக்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது.

நாகை மாவட்டத்திற்கு என்று தனிசிறப்பு உண்டு. இந்த மண்ணில் உள்ள திருக்குவளையில் தான் கலைஞர் பிறந்தார். அந்த வகையில் நான் உணர்வுபூர்வமாக சட்டசபை தொகுதி தேர்தல் பிரசாரத்தை இங்கே இருந்து தான் தொடங்கினேன். அப்போது நான் கைது செய்யப்பட்டேன்.

அந்த பிரசார பயணம் தமிழ்நாடு முழுவதும் பேசப்பட்டது. எல்லா மாவட்டத்திலும் எனக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் இங்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

ரூ.25 கோடிக்கு நலத்திட்டங்கள்

கடந்த 1½ ஆண்டு காலத்தில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி இளைஞர் அணி வளர்ச்சி நிதியை கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1½ ஆண்டுகளில் மாதம் 8 பேர் என்ற அளவில் தலா ரூ.25 ஆயிரம் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தி.மு.க. சார்பில் கடந்த 18 மாதங்களில் ரூ.25 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. இளைஞர் அணி சார்பில் கல்வி, மருத்துவம் ஆகியவற்றிற்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

நீங்கள்தான் காரணம்

கலைஞர் 5 முறை தமிழக முதல்-அமைச்சராக இருந்துள்ளார். 13 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். உலக அரசியல் வரலாற்றில் 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் கலைஞர். இதற்கு எல்லாம் கட்சியின் மூத்த முன்னோடிகளாகிய நீங்கள் தான் காரணம்.

அரசின் சாதனைகள் மக்கள் மத்தியில் கொண்டு சென்று தேர்தல் முடியும் வரை உழைப்பது கட்சியின் மூத்த முன்னோடிகள். இதனால் தான் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. அதேபோல் வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.

சிறப்பான ஆட்சி

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 2 ஆண்டு காலம் சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். இதைக்கண்டு பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் வயிற்றெரிச்சல் அடைகின்றனர். பா.ஜ.க. அரசு நம்மை மிரட்டுகிறது. தி.மு.க.வில் தொண்டர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி என பல்வேறு சார்பு அணிகள் உள்ளது.

ஆனால் பா.ஜ.க. அரசு சி.பி.ஐ., அமலாக்க துறை ஆகியவற்றை சார்பு அணிகளாக வைத்து தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறும் ஆட்சியை மிரட்டுகிறது. தேர்தல் காலங்களில் சி.பி.ஐ.யை ஏவி விட்டு ரெய்டு நடத்த செய்கிறார்கள்.

மிரட்ட நினைக்கிறது

இந்த மிரட்டல் தி.மு.க. ஆட்சியில் மட்டும் இல்லை, கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் நடந்துள்ளது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது குறித்த தகவல் கிடைத்ததன் பேரில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. சோதனை என்ற பெயரில் அ.தி.மு.க.வினரை மிரட்டி அடிபணிய வைத்தனர். அதுபோல் தி.மு.க.வை மத்திய அரசு மிரட்ட நினைக்கிறது.

பயப்பட மாட்டார்கள்

மத்திய அரசின் இந்த மிரட்டலுக்கு தி.மு.க.வின் கிளை செயலாளர்கள் கூட பயப்பட மாட்டார்கள். மத்திய அரசின் மிரட்டலுக்கு அடிபணிய நாங்கள் ஒன்றும் எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ இல்லை.

நாங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை மறந்து விடக்கூடாது. ஒரு பக்கம் மத்திய அரசு என்றால், மற்றொரு பக்கம் அ.தி.மு.க.வினர், அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

விரட்டியடிக்க வேண்டும்

அ.தி.மு.க.வுக்கு சிம்ம சொப்பனமாக நமது முதல்-அமைச்சர் திகழ்ந்து வருகிறார். மத்திய அரசை எதிர்த்து பீகார் மாநிலம் பாட்னாவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க நமது முதல்-அமைச்சர் சென்றுள்ளார். மத்திய பா.ஜ.க. அரசை விரட்டியடிப்பதை கலைஞர் நூற்றாண்டு விழாவின் பரிசாக நாம் கொடுக்க வேண்டும்.

கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் அடிமையான அ.தி.மு.க.வை ஓட, ஓட விரட்டியடித்தீர்கள். அதுபோல் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களான பா.ஜ.க.வையும் ஓட, ஓட விரட்டியடிக்க வேண்டும்.

கட்சியின் மூத்த முன்னோடிகளாக இருக்கும் உங்களை கவுரப்படுத்துவது வெறும் சடங்கு இல்லை. ஒரு பேரன் தாத்தாவுக்கு செய்யும் கடமையாக கருதுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள், கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story