எருதுகுட்டை பெருமாள் சுவாமி கோவிலில் மாலை தாண்டும் விழா


எருதுகுட்டை பெருமாள் சுவாமி கோவிலில் மாலை தாண்டும் விழா
x
தினத்தந்தி 2 July 2023 11:54 PM IST (Updated: 3 July 2023 12:02 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை அருகே எருதுகுட்டை பெருமாள் சுவாமி கோவிலில் மாலை தாண்டும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

மாலை தாண்டும் விழா

விராலிமலை தாலுகா ஜெயமங்கலம் குப்பாநாயக்கர் பண்ணையில் எருதுகுட்டை பெருமாள் சுவாமி கோவிலில் நேற்று மாலை தாண்டும் விழா (எருது விடும் விழா) வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை முதலே கரூர், தேசிய மங்களம், குளித்தலை, வில்லுகாரன்பட்டி, தோகைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட மாடுகளுக்கு உள்ளூர் பெண்கள் பாரம்பரிய முறைப்படி பாத பூஜைகள் செய்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து ஜெயமங்களத்திலிருந்து சுமார் 2 கி.மீ. அப்பால் உள்ள பகுதியிலிருந்து அனைத்து மாடுகளையும் ஒரே நேரத்தில் அவிழ்த்து விடப்பட்டு அதில் முதலாவதாக எருதுகுட்டை பெருமாள் சுவாமி கோவிலில் உள்ள அய்யாசீமை மந்தைக்கு வந்தடைந்த மாட்டிற்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்.

மீண்டும் போட்டி நடத்த வேண்டும்

அவ்வாறு நடைபெற்ற விழாவில் பல மாடுகள் போட்டியின் எல்லை தூரத்தை தொடும் முன்பே வேறு பாதையில் சென்று விட்டது. இதனால் முதலாவதாக வந்த மாட்டின் வெற்றியை ஏற்க முடியாது என்றும், மீண்டும் இந்த போட்டியை நடத்த வேண்டும் என போட்டியில் கலந்து கொண்டவர்கள் கூறினர். இதனால் மாலை தாண்டும் விழாவானது மீண்டும் இன்று காலை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நேற்று இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முதலாவதாக வந்த மாட்டின் வெற்றியை ஏற்றுகொள்வதாக ஒருமனதாக அனைவரும் முடிவெடுத்தனர்.

பரிசு

இதனால் மாலை தாண்டும் விழாவில் முதலாவதாக வந்த கரூர் மாவட்டம், கோவில்பட்டி பசுப்பேர் நாயக்கன் மந்தையை சேர்ந்த மாட்டிற்கு மஞ்சள், எலுமிச்சை பழம் மற்றும் குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டது.

இவ்விழாவில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story