கடனை முறையாக திருப்பி செலுத்தினால் அனைவரும் பயன் அடைய முடியும்
வங்கிகள் மூலம் பெறும் கடனை முறையாக திரும்பி செலுத்தினால் அனைவரும் பயன் அடைய முடியும் என தாட்கோ தலைவர் மதிவாணன் கூறினார்.
வங்கிகள் மூலம் பெறும் கடனை முறையாக திரும்பி செலுத்தினால் அனைவரும் பயன் அடைய முடியும் என தாட்கோ தலைவர் மதிவாணன் கூறினார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
இந்தவிழாவிற்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தாட்கோ தலைவர் மதிவாணன் கலந்து கொண்டு 41 பேருக்கு தொழில் தொடங்கிட ரூ.2 கோடியே 51 லட்சத்து 86 ஆயிரம் மொத்த தொகையில் ரூ.72 லட்சத்து 62 ஆயிரம் தாட்கோ மானியமும், தூய்மை பணியாளர்கள் 10 பேருக்கு அடையாள அட்டையும் வழங்கினார்.
அப்போது தாட்கோ தலைவர் கூறியதாவது:-
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
நிலங்கள் வாங்குவதற்கும், சுய தொழில் தொடங்கிடவும், வாகனங்கள் வாங்கிடவும் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கடனை பெற்று பயன் அடைபவர்கள் அரசின் திட்டங்களை பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும்.
மானியம் விடுவிக்கப்படுகிறது
தாட்கோ மூலம் பெறும் கடன்களுக்கு உடனடியாக மானியம் விடுக்கப்பட்டு வருகிறது. வங்கிகள் மூலம் பெறும் கடனை முறையாக திரும்பி செலுத்தினால் அனைவரும் பயன் அடைய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் பூண்டி.கே. கலைவாணன். எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா, நகர் மன்ற உறுப்பினர் பிரகாஷ், தாட்கோ மேலாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.