தூத்துக்குடி காசநோய் இல்லாத மாவட்டமாக மாற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்; கலெக்டர் பேச்சு


தூத்துக்குடி காசநோய் இல்லாத மாவட்டமாக மாற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்; கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தை வருகிற 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தை வருகிற 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

காசநோய் தடுப்பு சிகிச்சை முகாம்

தூத்துக்குடி பீச் ரோடு மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட காசநோய் மையத்தில் நேற்று காசநோயாளிகளின் குடும்பத்தினருக்கான குறுகிய கால காசநோய் தடுப்பு சிகிச்சை முகாம் நடந்தது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து நோயாளிகளுக்கு காசநோய் தடுப்பு மாத்திரைகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

காசநோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் காசநோய் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவர்களின் சேவைக்கு மரியாதை செய்கிறேன். காசநோய் இல்லாத இந்தியா என்ற இலக்கினை அடைய மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. முதலில் வருகிற 2030-ஆம் ஆண்டிற்குள் இந்த இலக்கினை அடைய வேண்டும் என்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் பின்னர் 2025-ஆம் ஆண்டிற்குள் அடைவதற்கு முடிவு செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் 60 காசநோயை துல்லியமாக கண்டறியும் உபகரணங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 2 உபகரணங்கள் உள்ளது. நிக்சய் போஷான் யோஜனா என்ற திட்டத்தின் மூலம் காசநோயாளிகளுக்கு மாதம்தோறும் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுவதற்கு சலுகைகள் அளிக்கப்படுகிறது. தற்போது காசநோயினால் பாதிக்கப்பட்ட பிறகு குணப்படுத்தும் நிலைதான் உள்ளது. எனவே நோய் அறிகுறிகள் இருப்பவர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களுக்கு காசநோய் உள்ளதா? என்று பரிசோதித்து தேவையான சிகிச்சைகள் அளிக்க வேண்டும்.

ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஆயிரம் பேர் காசநோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 250 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களின் உறவினர்கள், நண்பர்களுக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை பரிசோதிக்க வேண்டும். ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இவர்களுக்கு வாரம் ஒரு முறை என 3 மாதங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை வருகிற 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (காசநோய்) சுந்தரலிங்கம், முதல்வர் (காசநோய் பிரிவு) சங்கமித்ரா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மருத்துவர் மகேஷ்குமார், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ அலுவலர் (காசநோய் பிரிவு) காதர் முகைதீன் ஷெரீப், மாவட்ட காசநோய் மையம் நலக்கல்வியாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story