அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் 10-ந் தேதி நடக்கும் முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் 10-ந் தேதி நடக்கும் முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மனுநீதிநாள் முகாம்
வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம், எக்லாஸ்புரம், வடக்குப்பட்டு கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை வகித்தார்.
வருவாய்கோட்டாட்சியர் பிரேமலதா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சூரியகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், ஒன்றியக்குழுத் தலைவர் வெண்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் சம்பத் வரவேற்றார்.
முகாமில் 81 பயணாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அரசு கூறும் வழிகாட்டு நெறிமுறைகளான முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் 18 சதவீதம் நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமலும், 40 சதவீதம் நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமலும் உள்ளனர். 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் வெறும் 5 சதவீதம் நபர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
மாவட்டத்தில் வருகிற 10-ந் தேதி நடைபெறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாவர்களும், தகுதியுடையவர்கள் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரகுகுமார், சித்ரகலா, ஊராட்சி மன்றத் தலைவர்கள் தனலட்சுமி, பாரதிசேட்டு, மோகனவேல், மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணி, ஒன்றிய குழு உறுப்பினர் தியாகராஜன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.