அரூர் பேரூராட்சியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அரூர்:
அரூர் பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலையம், கடைவீதி, பாட்சா பேட்டை, அரசு பள்ளி ஆகிய பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து கடைகளின் மேற்கூரைகள் மற்றும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகள் அந்த பகுதிகளில் செல்வதற்கு சிரமப்பட்டு வந்தனர்.
மேலும் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மஜீத் தெரு, பாட்சா பேட்டை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் கடைகளை அமைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது, பாதுகாப்பு கருதி அரூர் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இதேபோல் கடந்த மாதம் பஸ் நிலைய பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.