ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்;கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
கார்த்தி சிதம்பரம் எம்.பி.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய குழு உறுப்பினரும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் நேற்று ஈரோட்டில் பிரசாரம் செய்தார். முன்னதாக ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மகாலில் நடந்த ஈரோடு மாநகர சட்டத்துறை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் மகத்தான வெற்றி பெறுவார். நான் இதுவரை பார்த்த வகையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அவருக்காக மக்கள் அதிக வாக்குகள் அளிப்பார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கண்டிப்பாக வந்து பிரசாரம் செய்வார்கள். எனது தந்தையும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் எம்.பி., 18 மற்றும் 19-ந் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். மற்ற தலைவர்களும் வருவார்கள்.
தி.மு.க. பலமான கட்சி
தமிழ்நாட்டில் காங்கிரசை விட தி.மு.க. பலமான கட்சி என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். எனவே அவர்களின் பிரசாரம் எங்களுக்கு மிகுந்த வலு சேர்க்கும். வேட்பாளராக உள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகுந்த திறமை மிக்கவர். அனுபவம் மிக்கவர். ஈரோட்டு மக்களுக்காக அவர் சட்டசபையில் இருக்க வேண்டும் என்று கட்சியின் அனைத்து தலைவர்களும் ஒருமித்த கருத்துடன் அவரை தேர்தலில் நிறுத்தி இருக்கிறோம். இந்த விஷயத்தில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்.
அகில இந்திய அ.தி.மு.க. என்ற கட்சி எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் இருந்த பழைய கட்சி அல்ல. இது செயற்கையாக ஒருங்கிணைக்கப்பட்ட அ.தி.மு.க. என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்ற இன்னும் 3 ஆண்டுகள் கால அவகாசம் உள்ளது. கண்டிப்பாக நிறைவேற்றுவார்கள். எங்களுக்கும் தி.மு.க.வுக்கும் கருத்து வேறுபாடுகள் இல்லை என்று நான் கூற மாட்டேன். சில விஷயங்களில் நானே உடன்பட மாட்டேன். ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளுக்கு வரவேற்பு அளித்ததை நாங்கள் ஏற்கவில்லை. அதற்கு எதிரான கருத்தை நான் பதிவு செய்து இருக்கிறேன். ஆனால் அதை எல்லாம் தாண்டி இந்த நாட்டுக்காக, இந்தியாவில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்ற கொள்கை உள்பட பல விஷயங்களில் ஒன்றுபட்டு இருக்கிறோம்.
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
எதிர்க்கட்சிகள் சேறுவாரி இறைத்தாலும் தாமரை மலரும் என்று பிரதமர் கூறியது பற்றி கேட்டபோது, எனக்கு தாமரை பிடிக்காது, ரோஜா பூ தான் பிடிக்கும் என்றார்.
பேட்டியின் போது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் ஆர்.எம்.பழனிச்சாமி, மாநகர் மாவட்ட பொறுப்பாளர் டி.திருச்செல்வம், தமிழ்நாடு காங்கிரஸ் வக்கீல் பிரிவு தலைவர் சந்திரமோகன், செயலாளர் சி.எம்.ராஜேந்திரன், மாவட்ட மனித உரிமைத்துறை தலைவர் வினோத் மாரியப்பா, ஊடகபிரிவு தலைவர் ம.முகமது அர்சத், சிறுபான்மை பிரிவு தலைவர் சூர்யா சித்திக், துணைத்தலைவர் கே.என்.பாஷா உள்பட பலர் உடன் இருந்தனர்.