சமதர்மத்துடன் ஆட்சி நடத்தும் முதலமைச்சரை முழுமையாக ஆதரிக்க வேண்டும் எனஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தல்


சமதர்மத்துடன் ஆட்சி நடத்தும் முதலமைச்சரை முழுமையாக ஆதரிக்க வேண்டும் எனஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சமதர்மத்துடன் ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சரை முழுமையாக ஆதரிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

தூத்துக்குடி

சமதர்மத்துடன் ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சரை முழுமையாக ஆதரிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

பொன் விழா

தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம், பொதுவிழாவில் ஈடுபட்டு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, அவரை பாராட்டும் வகையில் பொதுவாழ்வில் பொன்விழா நடத்தப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ (தெற்கு), முரளிதரன் (மாநகரம்), காமராஜ் (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகேந்திரன் வரவேற்று பேசினார். ஐ.என்.டி.யு.சி. செயற்குழு உறுப்பினர் ராஜ் நோக்க உரையாற்றினார்.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். ஏ.பி.சி.வீ.சண்முகம் ஏற்புரை வழங்கினார்.

விழாவில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசும்போது கூறியதாவது:-

சமதர்ம ஆட்சி

ஏ.பி.சி.வீ.சண்முகம் போன்றவர்களின் சேவை, இந்த நாட்டு மக்களுக்கு தேவையாக உள்ளது. அவர் தலைமையில் கட்சியினர் சுறுசுறுப்பாக இயங்கினார்கள். வாய்ப்பு வந்து இருக்குமேயானால் ஏ.பி.சி.வீ.சண்முகம் தலைமையில் லட்சக்கணக்கான தலைவர்கள் தமிழகத்தில் உருவாகி இருக்க முடியும்.

சாதி, மதம், மொழியின் பெயரால் ஆளுகின்றவர்கள் மக்களை பிரிக்க பார்க்கிறார்கள். அவர்களை எதிர்க்க நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். பா.ஜனதா கட்சியை தி.மு.க. எதிர்க்கும் அளவுக்கு கூட காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறதா என்று தெரியவில்லை.

தமிழகத்தில் நல்ல முதல்-அமைச்சர் கிடைத்து உள்ளார். சமதர்மத்துடன் ஆட்சி நடத்தி வருகிறார். அவரை நாம் முழுமையாக ஆதரிக்க வேண்டும். காங்கிரஸ்காரர்களுக்கு இன்று மரியாதை இருக்கிறது என்றால், அது தி.மு.க.வால் தான் வந்து இருக்கிறது. தி.மு.க. கூட்டணியின் ஆதரவோடுதான் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றது. தேர்தல் வெற்றி என்பது குறிக்கோள் அல்ல. இந்த நாடு காப்பாற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர் ராமச்சந்திரன், செய்தி தொடர்பாளர் கோபண்ணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயற்குழு உறுப்பினர் கனகராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத்தலைவர் நவாஸ்கனி எம்.பி., மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன், முன்னாள் எம்.பி. அப்பாத்துரை, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஷாஜகான், சிவசுப்பிரமணியன், வ.உ.சி. கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர் நன்றி கூறினார்.


Next Story