அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்தமிழகத்தில் கள்ளச்சாராய இறப்பு இல்லைமுன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கள்ளச்சாராய இறப்பு இல்லை என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
கள்ளச்சாராய இறப்பு இல்லை
நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்.எல்.ஏ. நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமீபத்தில் விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் அ.தி.மு.க ஆட்சியிலும் கள்ளச்சாராய சாவு நடைபெற்றது என கூறியுள்ளனர். ஆனால் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 14 ஆண்டுகளாக தமிழகத்தில் கள்ளச்சாராய இறப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயம் மற்றும் விஷ சாராயம் விற்பனையும் நடைபெறவில்லை. அதனால் சாவுகளும் நடைபெற்றதில்லை. தி.மு.க அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் தவறான தகவல்களை தெரிவிப்பதை கைவிட்டு, பொதுமக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
உயர்மின் கோபுர பாதை
தமிழகத்தில் தற்போது 19,387 மெகாவாட் மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதாகவும் தமிழகத்தில் மின்வெட்டு எங்கும் இல்லை, மின்சார தடை தான் இருக்கிறது எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய விளக்கத்தை தெரிவித்துள்ளார். சென்னையில் 13 துணை மின் நிலையங்களை அ.தி.மு.க. அரசு ஏற்கனவே அமைத்து வைத்ததை தி.மு.க. அரசு தொடங்கி வைத்துள்ளது. தற்போது தமிழகத்தில் 19,387 மெகாவாட் மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதற்கு அ.தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உயர்மின் கோபுர மின்பாதை அமைத்தது தான் காரணம்.
நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சாரதா இருந்து வருகிறார். கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட கவுன்சிலர் கூட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த துணைத்தலைவர் செந்தில்குமார் என்பவர், அத்துமீறி தலைவர் இருக்கையில் அமர்ந்து கூட்டத்தை நடத்தி உள்ளார்.
உண்மை குற்றவாளிகள்
இந்த தவறை செய்த தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் மீது தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜேடர்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் பிரச்சினை குறித்து மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து கைது செய்தால் மட்டுமே பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.
நாமக்கல்லில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளனர். இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. கொடிகளை கட்டி உள்ளனர். குமாரபாளையம் பகுதிகளிலும் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டுள்ளது. இது குறித்து குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் நாங்கள் புகார் செய்து உள்ளோம். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர். அ.தி.மு.க. முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருந்த போதும், ஓ.பி.எஸ். அணி தி.மு.க.வின் `பி டீமாக' செயல்பட்டு வருவது. இதில் இருந்து தெளிவாக தெரிகிறது. .
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா, பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. பொன் சரஸ்வதி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.