முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி
நிலக்கோட்டை அருகே நடந்த விபத்தில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலியானார்.
நிலக்கோட்டை அருகே உள்ள கு.பிரிவை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 22). இவர், சிறுநாயக்கன்பட்டி பகுதியில் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர், விளாம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பினார்.
அணைப்பட்டி-விளாம்பட்டி சாலையில், நாட்டார் பட்டி பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது அணைப்பட்டியில் இருந்து விளாம்பட்டி நோக்கி வந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தினேஷ் குமாருக்கு, திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான தினேஷ்குமார், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.