குளத்தில் மூழ்கி முன்னாள் ராணுவ வீரர் சாவு


குளத்தில் மூழ்கி முன்னாள் ராணுவ வீரர் சாவு
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே குளத்தில் விழுந்த தேங்காயை எடுக்க சென்ற முன்னாள் ராணுவவீரர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே குளத்தில் விழுந்த தேங்காயை எடுக்க சென்ற முன்னாள் ராணுவவீரர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

முன்னாள் ராணுவவீரர்

மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு மேக்கரவிளையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 59), முன்னாள் ராணுவவீரர். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் கேரள மாநிலத்தில் வேலை செய்து வருகிறார். மகள் டாக்டருக்கு படித்து முடித்துள்ளார். தற்போது இருவரும் பெற்றோருடன் உள்ளனர்.

நாகராஜூக்கு சொந்தமான தென்னந்தோப்பு அவரது வீட்டின் அருகில் உள்ளது. அந்த தோட்டத்தின் பக்கத்தில் மேக்கரை என்ற குளமும் உள்ளது.

குளத்தில் விழுந்த தேங்காய்

இந்தநிலையில் நேற்று முன்தினம் தென்னந்தோப்பில் உள்ள மரத்தில் இருந்து தேங்காய்கள் பறிக்கும் பணி நடந்தது. அப்போது சில தேங்காய்கள் அருகில் உள்ள மேக்கரை குளத்துக்குள் விழுந்துள்ளன.

இதைகண்ட நாகராஜ் குளத்துக்குள் விழுந்த தேங்காயை எடுக்க தண்ணீரில் இறங்கினார். அதன்படி நீந்திச் சென்று தேங்காய்களை ஒவ்வொன்றாக சேகரித்து கரைக்கு கொண்டு சேர்த்தார். இதை அவரது மகனும், மகளும் கரையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

மகன், மகள் கண்ணெதிரே...

கடைசியாக ஒரு தேங்காய் மட்டும் குளத்துக்குள் கிடந்தது. அதை எடுக்க நாகராஜ் குளத்துக்குள் நீந்திச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரால் தொடர்ந்து நீந்த முடியாமல் தண்ணீரில் தத்தளித்தார்.

தங்கள் கண்ணெதிரே தந்தை தண்ணீரில் தத்தளிப்பதை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டபடி கதறி அழுதனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் நாகராஜ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், அவர்கள் குளத்துக்குள் பிணமாக கிடந்த நாகராஜை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது, கரையில் நின்ற அவரது குடும்பத்தினர் அனைவரும் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மார்த்தாண்டம் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story