நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி: அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதிரி தேர்வு நாமக்கல்லில் நடந்தது
நாமக்கல்லில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க நேற்று மாதிரி தேர்வு நடத்தப்பட்டது.
நாமக்கல்:
16 மாணவ, மாணவிகள் சேர்க்கை
மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதன் மூலம் மட்டுமே எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் 2020-20–21-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 முடித்த 16 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இந்த ஆண்டும் மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத பிரத்யேக பயிற்சி வழங்க திட்டமிட்டு உள்ளது. அதற்காக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 215 மாணவ, மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாதிரி தேர்வு நடத்தப்பட்டது.
45 நாட்கள் பயிற்சி
காலை 10.15 முதல் 11.15 மணி வரை 1 மணி நேரம் 50 மதிப்பெண்ணுக்கு இத்தேர்வு நடத்தப்பட்டது. அதில், குறிப்பிட்ட அளவு மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறையினர் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு ஆயத்த பயிற்சி நடத்தப்பட்டு உள்ளது. அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 45 நாட்கள் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும்.
ஒரு பாடத்துக்கு 12 பேர் வீதம் மொத்தம் 60 ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். மாணவ, மாணவிகள் அங்கேயே தங்கி முழுநேர பயிற்சி எடுக்க உள்ளனர். இதன் மூலம் வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி சேர்க்கையில் இடம் பெறுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.