தனித்தேர்வர்கள் 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின், முதல்வர் ஆனந்தி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- ஆகஸ்டு 2022-ல் நடைபெற உள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையத்தளம் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து சிவகங்கை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், காளையார்கோவிலில் கொண்டு வந்து சமர்ப்பிக்கப்பட வேண்டும். புகைப்படம் வெப் கேமரா வழியாக படம் எடுக்கப்படுவதால் தேர்வர்கள் கண்டிப்பாக நேரில் வர வேண்டும். தேர்விற்கான கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50-ம், மதிப்பெண் சான்றிதழ் முதலாம் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டுக்கு தலா ரூ.100 வீதமும், பதிவு மற்றும் சேவை கட்டணம் ரூ.15-ம், ஆன்லைன் கட்டணம் ரூ.50-ம் நேரில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்வு கட்டணம் மற்றும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 7.7.2022, சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் 8.7.2022 முதல் 9.7.2022 வரை சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1000 செலுத்தி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.