டேராடூன் ராணுவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு தகுதி தேர்வு-அக்டோபர் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
தர்மபுரி:
டேராடூன் ராணுவ கல்லூரியில் 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தகுதி தேர்வுக்கு வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தகுதி தேர்வு
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவ கல்லூரியில் 2023-ம் கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கு தகுதி தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 11 வயதுக்கு குறையாமலும் 13 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 2.7.2010-க்கு முன்போ 1.1.2012-க்கு பின்னரோ பிறந்திருக்க கூடாது.
இந்த தகுதி தேர்வுக்கான விண்ணப்ப படிவம், தகவல் கையேடு மற்றும் முந்தைய வினாத்தாள்களின் நகல்கள் பெற பொது பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.600-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் சாதி சான்றிதழுடன் ரூ.555-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
முழு முகவரி
இந்த கட்டணத்தை தி கமாண்டன்ட், ஆர்.ஐ.எம்.சி. டேராடூன், டிராவி பிரான்ச், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, டெல்பவன், டேராடூன், (பேங்க் கோடு 01576) உத்தரகாண்ட் என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து ராஷ்டிரியா இந்தியன் மிலிட்டரி காலேஜ், கார்கி காண்ட், டேராடூன் உத்தரகாண்ட், 248003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதனுடன் விண்ணப்பதாரரின் முழு முகவரி, பின்கோடு, செல்போன் எண் அல்லது தொலைபேசி எண் குறிப்பிடப்பட்ட கடிதத்தை அனுப்பி தேர்வுக்கான விண்ணப்பத்தை பெற்று கொள்ள வேண்டும்.
இந்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து இரட்டை படிவங்களாக, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை 600003 என்ற முகவரிக்கு வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.