தருமபுரி மாவட்டத்தில் 35 மையங்களில் குரூப்-1 தேர்வை 7,402 பேர் எழுதினர்-3,436 பேர் எழுத வரவில்லை
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 35 மையங்களில் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதன்மை தேர்வை 7 ஆயிரத்து 402 பேர் எழுதினர். 3,436 பேர் தேர்வு எழுத வரவில்லை.
குரூப்-1 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் குரூப்-1-ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான முதன்மை தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. தர்மபுரி மாவட்டத்தில் குரூப்-1 முதன்மை தேர்வு 35 மையங்களில் நடந்தது. இந்த தேர்வை எழுத மொத்தம் 10 ஆயிரத்து 838 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்தநிலையில் நேற்று நடந்த தேர்வை மொத்தம் 7 ஆயிரத்து 402 பேர் மட்டுமே எழுதினார்கள். 3 ஆயிரத்து 436 பேர் தேர்வு எழுத வரவில்லை. அனைத்து தேர்வு மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க வருவாய்த்துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பலத்த சோதனை
தேர்வையொட்டி அனைத்து மையங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் அனைத்து பஸ்களும் தேர்வு மையங்களில் நின்று செல்ல உத்தரவிடப்பட்டிருந்தது. அனைத்து தேர்வு மையங்களிலும் காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வாளர்கள் வந்தனர். வரிசையில் காத்திருந்த தேர்வாளர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு மையத்திற்கு 9 மணிக்கு பின் வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.