தர்மபுரியில் போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு-சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி ஆய்வு
தர்மபுரி:
தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வை சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடற்தகுதி தேர்வு
இரண்டாம் நிலை போலீஸ்காரர், தீயணைப்பு படை வீரர் மற்றும் வனக்காவலர் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. மொத்தம் 5 நாட்கள் நடைபெறும் இந்த தேர்வில் பங்கேற்க தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 1,138 ஆண் தேர்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற முதல் நாள் தேர்வில் பங்கேற்க 390 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 344 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு உயரம், மார்பளவு ஆகியவை அளவீடு செய்யப்பட்டன.
டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு
உடற்தகுதி தேர்வில் தேர்வர்களின் கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இந்த உடற்தகுதி தேர்வை சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
போலீஸ் அதிகாரிகள் உடற்தகுதி தேர்வை நடத்தினார்கள். தேர்வில் முறைகேடுகள் ஏற்படாமல் தடுக்க ஆயுதப்படை வளாக பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.