சிறப்பு கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு-6,300 பேர் எழுதுகிறார்கள்
தர்மபுரி:
சிறப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு வருகிற 25-ந் தேதி நடக்கிறது. இதனை தா்மபுாி மாவட்டத்தை சோ்ந்த 6,300 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.
கல்வி உதவித்தொகை
நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை கைவிட்டு, உயர்கல்வி கற்க உதவியாகவும், மேல்நிலைக்கல்வி தடைபட்டு விடக்கூடாது என்ற நோக்கிலும் மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஊரக திறனாய்வு தோ்வை நடத்தி வருகிறது. இதன்மூலம் 1 லட்சம் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுத தகுதி ஆனவர்கள். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
22 மையங்கள்
அதன்படி, 2023-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற அரசு, அரசு உதவிபெறும் நகராட்சி, ஊராட்சி பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 25-ந் தேதி தேசிய திறனாய்வு தோ்வு நடக்கிறது. இந்த தோ்வு தா்மபுாி மாவட்டத்தில் 22 மையங்களில் நடக்கிறது. தா்மபுாி மாவட்டத்தில் 547 அரசு பள்ளிகளை சோ்ந்த 6,300 மாணவ, மாணவிகள் இந்த தோ்வை எழுதுகின்றனா். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் தேசிய திறனாய்வு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் மாதிரி தேர்வு நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.