நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்குகிறது: தருமபுரி மாவட்டத்தில் 82 மையங்களில் 22,757 பேர் எழுதுகிறார்கள்-முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்குகிறது: தருமபுரி மாவட்டத்தில் 82 மையங்களில் 22,757 பேர் எழுதுகிறார்கள்-முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் நாளை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 82 மையங்களில் 22,757 பேர் எழுதுகிறார்கள். இதற்கான முன்னேற்பாடு பணிகளில் ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்கி ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. நடப்பாண்டில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 107 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 86 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என 193 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 507 மாணவர்களும், 11 ஆயிரத்து 250 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 757 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனா்.

இதற்காக மாவட்டம் முழுவதும் 2 தனித் தேர்வு மையங்கள் உள்பட 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என 3 ஆயிரத்து 500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணிநேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளில் ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பதிவு எண் எழுதும் பணி

கடந்த 2 நாட்களாக அந்தந்த தேர்வு மையங்களில் சம்பந்தப்பட்ட மைய கண்காணிப்பாளர் முன்னிலையில் ஆசிரியர்கள் மேஜைகளில் மாணவர்களின் பதிவு எண்களை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அரூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 24 மையங்களில் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த மையங்களில் அறை கண்காணிப்பாளர் பணியில் 526 முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். நேற்று தேர்வு அறைகளில் மாணவ-மாணவிகளின் பதிவு எண்களை எழுதும் பணி நடந்தது.

தடையில்லா மின்சாரம்

பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பாக மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தர்மபுரி மாவட்டத்தில் 82 தேர்வு மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை முதல் தொடங்குகிறது. இந்த தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்களில் பஸ்கள் நின்று செல்வதை உறுதி செய்ய வேண்டும். தேர்வு மையங்களுக்கு போதிய குடிநீர் வசதி மற்றும் துப்புரவு பணியை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே மாணவ, மாணவிகள் தேர்வினை உண்மையாகவும், நேர்மையாகவும், எந்தவித அச்சமோ, பதற்றமோ இல்லாமல் எளிமையாக, மகிழ்ச்சியுடன் எழுத வேண்டும். தேர்வு பணிகளில் ஈடுபடுபவர்கள் தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு தேவையான அனைத்து பணிகளையும் அந்தந்த அலுவலர்கள் முழுமையாக மேற்கொள்வதோடு, எந்தவித தவறுகளும் ஏற்படாத வண்ணம் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.


Next Story