பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு


பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு
x

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்தது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்தது.

தேர்வு முடிவு வெளியீடு

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தன. இதில் மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பிளஸ்-2, பிளஸ்-1 ஆகிய பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஈரோடு மாமரத்துப்பாளையத்தில் உள்ள இந்து கல்வி நிலையம், கொங்கம்பாளையத்தில் உள்ள எஸ்.வி.என். மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பாரதி வித்யாலயா பள்ளிக்கூடம் ஆகிய மையங்களில் நடந்தன.

இதில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் 10-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் வருகிற 8-ந் தேதி வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி அறிவித்து உள்ளார். எனவே விடைத்தாள் திருத்தும் பணியும் முடுக்கி விடப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலும் விடைத்தாள்கள் முழுமையாக திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

பணிகள் நிறைவு

பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த பணிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஈரோடு செங்கோடம்பாளையத்தில் உள்ள யு.ஆர்.சி. மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குருகுலம் மேல்நிலை பள்ளிக்கூடம், சத்தியமங்கலத்தில் உள்ள ராகவேந்திரா மேல்நிலை பள்ளிக்கூடம் ஆகிய 3 மையங்களில் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. இந்த பணிகள் நேற்று நிறைவு பெற்றது.

எனவே பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நேற்றுடன் முழுமையாக நிறைவு பெற்றது. திருத்தப்பட்ட விடைத்தாள்களும், அதற்குரிய ஆவணங்களும்நாளை (வெள்ளிக்கிழமை) பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story