10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.79 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
திருவாரூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.79 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.79 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
10-ம் பொதுதேர்வு
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடந்தது. இதில் தனித்தேர்வர்கள் மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் தேர்வு எழுதினர். திருவாரூர் மாவட்டத்தில் மாணவர்கள் 7,603 பேரும், மாணவிகள் 7,713 பேரும் தேர்வு எழுதினர்.மாணவ-மாணவிகள் எழுதிய விடைதாள்கள் பாதுகாப்பாக விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தனர்.
தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. திருவாரூர் மாவட்டத்தில் 15ஆயிரத்து 316 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில், மாணவர்கள் 6 ஆயிரத்து 633 பேரும், மாணவிகள் 7 ஆயிரத்து 273 என மொத்தம் 13 ஆயிரத்து 906 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மொத்த தேர்ச்சி சதவீதம் 90.79. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 87.18 சதவீதம் ஆகும். இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் 3.61 சதவீதம்அதிகரித்துள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் கடந்த ஆண்டு 30-வது இடத்தில் இருந்த திருவாரூர் மாவட்டம் இந்த ஆண்டு 23- வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
100 சதவீதம் தோ்ச்சி
திருவாரூர் மாவட்டத்தில் 143 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 56 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அதில் திருவாரூர் ஆமூர், பைங்காநாடு, உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டினம், திருமக்கோட்டை, பாளையக்கோட்டை, மருதுவனம், காரையான்காடு, தென்பேரை, பாண்டி, திருத்தங்கூர், கோவில் வெண்ணி, தெண்டியகாடு, காரக்கோட்டை, 34-கூத்தனூர், வடகரை, அத்திகடை, கொட்டாரகுடி, ஏனாம்கிள்ளியூர் உள்ளிட்ட 24 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது.