5,846 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்


5,846 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்
x
திருப்பூர்


உடுமலை தாலுகாவில் 26 தேர்வு மையங்களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 5,846 பேர் எழுதினர். 1,208 பேர் தேர்வு எழுதவரவில்லை. தேர்வு நடைபெற்றதை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.முனியநாதன் பார்வையிட்டு, தேர்வு பணிகள் குறித்து ஆய்வுமேற்கொண்டார்.

டி.என்.பி.எஸ்.சி.குரூப்-4 தேர்வு

தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கு தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப்-4 தேர்வு தமிழ் நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் நேற்று நடந்தது. இந்த தேர்வுக்காக உடுமலை தாலுகாவில் அரசு கலைக்கல்லூரி, ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவிசாலாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆர்.ஜி.எம்.மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சீனிவாசா வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஆர்.கே.ஆர்.கிரிக்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, காந்தி கலாநிலையம் மேல்நிலைப்பள்ளி, ஆர்.கே.ஆர்.ஞானோதயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீஆதர்ஷ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி, தேவனூர்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, எலையமுத்தூர் எஸ்.என்.வி.அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 26 தேர்வுமையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த 26 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதற்கு மொத்தம் 7,054 பேருக்கு அனுமதி சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கப்பட்டிருந்தது. இதில் நேற்று நடந்த குரூப்-4தேர்வை5,846பேர் எழுதினர். 1,208 பேர் தேர்வு எழுதவரவில்லை.

டி.என்.பி.எஸ்.சி.தலைவர் ஆய்வு

இந்த குரூப்-4 தேர்வு நடைபெறுவதையொட்டி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் சி.முனியநாதன் நேற்று உடுமலைக்கு வந்திருந்தார். அவர் உடுமலை தளி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு நடைபெற்றதை பார்வையிட்டு, தேர்வு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் உடுமலை பொறுப்பு அதிகாரியான (நோடல் ஆபீசர்) ஆர்.டி.ஓ.ஆர். ஜஸ்வந்த்கண்ணன் உடன்சென்றிருந்தார். முன்னதாக ஆர்.டி.ஓ.ஆர்.ஜஸ்வந்த்கண்ணன் லூர்து மாதா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


Next Story