மாவட்ட அளவில் மாணவ-மாணவிகளுக்கான தேர்வு போட்டிகள்


மாவட்ட அளவில் மாணவ-மாணவிகளுக்கான தேர்வு போட்டிகள்
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளையாட்டு விடுதிகளில் சேர மாவட்ட அளவில் மாணவ-மாணவிகளுக்கான தேர்வு போட்டிகள் வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

விழுப்புரம்

விழுப்புரம்:

தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகள் விளையாட்டில் சாதனைகள் படைக்க ஏதுவாக தங்குமிட வசதி, சத்தான உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள், விளையாட்டு பள்ளிகள் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், ஊட்டி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களிலும், மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.

மாணவ-மாணவிகளுக்கான தேர்வு போட்டிகள்

இந்த விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு 6, 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வுகள் வருகிற 24-ந் தேதியன்று காலை 7 மணியளவில் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள

மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் 23-ந் தேதியன்று மாலை 5 மணியாகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

தேர்வு போட்டிகளில் கலந்துகொள்ள 24-ந் தேதியன்று வரும் மாணவ- மாணவிகள் இணையதளத்தில் பதிவு மேற்கொண்ட விண்ணப்பம், ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை கொண்டு வர வேண்டும். மேற்கண்ட தேர்வு போட்டிகள் தொடர்பான இதர விவரங்களை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (7401703485, 8675773551, 6381799370) தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.


Next Story