திருச்சி விமான நிலைய ஓடுதளத்தில் நுழைந்தவரால் பரபரப்பு


திருச்சி விமான நிலைய  ஓடுதளத்தில் நுழைந்தவரால் பரபரப்பு
x
திருச்சி

செம்பட்டு,ஜூன்.25-

திருச்சி விமான நிலைய பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலைய வளாகத்திற்குள் நுழையும் போது, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்துவார்கள். அதன்பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் நேற்று காலை சுமார் 7 மணி அளவில் திருச்சி விமான நிலைய ஓடுதளத்தில் ஒருவர் சுற்றித்திரிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த விமான நிலைய பாதுகாப்பு படையினர் அந்த நபரை பிடித்தனர். விசாரணையில், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில்,அவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா என தெரியவந்தது. இவர் கடந்த சில நாட்களாகவே விமானநிலைய பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். இதனிடையே அவர் புதிய முனைய கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதியின் வழியாக விமான நிலைய ஓடுதளத்திற்கு சென்றுள்ளார். பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், அந்த நபரை திருச்சி விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரை செம்பட்டு பகுதியில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் பாதுகாப்பை மீறி விமானநிலைய ஓடுதளத்திற்குள் நுழைந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story