சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்ணால் பரபரப்பு
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஓ.சவுதாபுரம் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி (வயது 23). இவர் நேற்று தனது தந்தை செல்வராஜ், தாய் தேன்மொழி ஆகியோருடன் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் செல்ல மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து வைஷ்ணவி கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், எனக்கும் ஆட்டையாம்பட்டியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சில மாதங்களிலேயே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால் கணவன் என்னை அடித்து விரட்டிவிட்டார். மேலும் அவர் என்னிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். திருமணத்தின் போது பெற்றோர் எனக்கு வழங்கிய 5 பவுன் நகை, சீர்வரிசை பொருட்களை அங்குள்ள வீட்டில் வைத்து பூட்டி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பொருட்கள் காணவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் சரியாக விசாரணை நடத்தப்படவில்லை. ஆகையால் கணவர் மீது நடவடிக்கை எடுத்து என்னுடைய நகை மற்றும் பொருட்களை மீட்டு தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.