பெட்ரோல் பாட்டிலுடன் வந்த முதியவரால் பரபரப்பு
ஏரியில் மீன்பிடிக்க விடாமல் சிலர் தடுப்பதாக கூறி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு பெட்ரோல் பாட்டிலுடன் வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்
ஏரியில் மீன்பிடிக்க விடாமல் சிலர் தடுப்பதாக கூறி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு பெட்ரோல் பாட்டிலுடன் வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்வு நாள் கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், காட்பாடி சட்டக்கல்லூரி மாணவர்கள் அளித்த மனுவில் வேலூரில் தற்போது புதிய பஸ்நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.46 கோடியில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் திறக்கப்பட உள்ள இந்த பஸ்நிலையத்துக்கு அம்பேத்கர் பெயர் வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
வீட்டை விற்க முயற்சி
காட்பாடி காங்கேயநல்லூரை சேர்ந்த தம்பதியரான நீலகண்டன்-விஜயலட்சுமி அளித்த மனுவில், எங்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் எங்கள் இருவரையும் அடித்து விரட்டி விட்டார். தற்போது அவர் எங்கள் பெயரில் உள்ள வீட்டை விற்க முயற்சி செய்கிறார். இதனை தடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
காட்பாடி தாலுகா கன்சாலூர் அருந்ததியர் குடியிருப்பை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், நாங்கள் இந்த பகுதியில் 50 குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கு அருகே உள்ள பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பெட்ரோல் பாட்டிலுடன் வந்த முதியவர்
காட்பாடியை அடுத்த எர்த்தாங்கல் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 65)என்பவர் கலெக்டரிடம் மனு அளிக்க சென்றார். அப்போது திடீரென ஆறுமுகம் கைப்பையில் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை வெளியே எடுத்தார். இதைக்கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக ஆறுமுகத்திடம் இருந்து பெட்ரோல் பாட்டிலை பறித்தனர். பின்னர் அவரை கூட்டரங்கிற்கு வெளியே அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர், நான் எர்த்தாங்கல் ஏரியில் மீன்பிடிப்பதற்காக பொதுப்பணித்துறையில் ரூ.30 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்துள்ளேன்.
ஆனால் பக்கத்து கிராமத்தை சேர்ந்த சிலர் அந்த ஏரி எங்கள் பஞ்சாயத்தில் வருகிறது. எனவே எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் தான் மீன்பிடிப்பார்கள். மற்றவர்கள் மீன் பிடிக்கக்கூடாது என்று மிரட்டி வருகிறார்கள். இதுகுறித்து திருவலம் போலீஸ் நிலையம், பொதுப்பணித்துறை அதிகாரி உள்பட பலரிடம் புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஏரியில் மீன்பிடிக்க அனுமதிக்க கோரியும், என்னை மீன்பிடிக்க விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள வந்தேன் என்று தெரிவித்தார். அதையடுத்து போலீசார், ஆறுமுகத்தை சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
வேலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் சோதனைக்கு பின்னரே உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அதையும் மீறி முதியவர் பெட்ரோல் பாட்டிலுடன் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.