வாகனங்களை தாக்கிய காட்டுயானையால் பரபரப்பு


வாகனங்களை தாக்கிய காட்டுயானையால் பரபரப்பு
x

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களை தாக்கிய காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களை தாக்கிய காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது.

பலாப்பழ சீசன்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலாப்பழ சீசன் நிலவுகிறது. இதனால் சமவெளி பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள், குஞ்சப்பனை பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்து முகாமிட்டு உள்ளன.

அந்த யானைகள் குட்டிகளுடனும், தனியாகவும் அவ்வப்போது கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உலா வருகின்றன. மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

வாகனங்களை தாக்கியது

இந்தநிலையில் நேற்று மாலையில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் முள்ளூர் கிராம பகுதியில் ஆண் காட்டு யானை உலா வந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சற்று தொலைவிலேயே பாதுகாப்பாக நிறுத்தினர். ஆனால் அந்த யானை அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பள்ளி வாகனத்தை நோக்கி வேகமாக வந்தது. உடனே டிரைவர் இறங்கி ஓட்டம் பிடித்தார்.

பின்னர் அந்த பள்ளி வாகனத்தையும், பின்னால் வந்த ஜீப், அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக காட்டுயானை தாக்கி சேதப்படுத்தியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். இது தவிர அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அகழி வெட்ட நடவடிக்கை

சிறிது நேரம் கழித்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் காட்டுயானை சென்றது. அதன்பிறகு அந்த வழியே வாகன போக்குவரத்து தொடங்கியது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் குஞ்சப்பனை சுற்று வட்டார பகுதியில் பலாப்பழ சீசன் தொடங்கும் சமயத்தில் இந்த பிரதான சாலையில் காட்டு யானைகள் வாகனங்களை தாக்கி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. எனவே காட்டு யானைகள் சாலைக்கு வராத வகையில் அகழி வெட்டவோ அல்லது பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கவோ வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

-------------------------


Next Story