சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு
ஜெயங்கொண்டம் கடைவீதியில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் இருந்து 40 கார்பன் டை ஆக்சைடு சிலிண்டர்களை ஏற்றி கொண்டு கும்பகோணத்திற்கு ஒரு சரக்கு வாகனம் நேற்று சென்று கொண்டு இருந்தது. இந்த வாகனத்தை திருச்சியை சேர்ந்த டிரைவர் மணி என்பவர் ஓட்டி சென்றார். ஜெயங்கொண்டம் கடைவீதியில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென சத்தம் கேட்டது. இதனால் பீதியடைந்த மணி தனது வாகனத்தை சாலையோரம் நிறுத்தினார். அப்போது ஒரு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் நிலவியது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அந்த சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு சரி செய்யப்பட்டது. அதன்பிறகு அந்த சரக்கு வாகனம் கும்பகோணத்திற்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.